இலங்கையில் நடந்த போர்க்குற்றம், மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மான விவரம் முழுமையாக தெரியவில்லை. அதைப் பார்த்து விட்டு அதை ஆதரித்து வாக்களிக்க இந்தியா ஆர்வமாக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த அறிவிப்பு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகலாம் என்று கருதப்படும் திமுகவை, காங்கிரஸ் மேலிடம் தற்காலிகமாக அமைதிப்படுத்த எடுத்துள்ள முயற்சியாக கருதப்படுகிறது.
முன்னதாக மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பிக்களும் ஒரே குரலில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி போராடி வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
மேலும் திமுகவும் தனது உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தை நாளை கூட்டியுள்ளதாக அறிவித்தது. மேலும் இன்று காலை திடீரென ஒரு உண்ணாவிரத அறிவிப்பையும் திமுக தலைமை அறிவித்தது. அதன்படி 22ம் தேதி கருணாநிதி தலைமையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசுக்கும், காங்கிரஸுக்கும் நெருக்கடி கொடுக்க இந்த அறிவிப்புகளை திமுக வெளியிட்டதாக கருத்து எழுந்தது. இந்தப் பின்னணியில் இன்று மக்களவையில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முனைப்புடன் உள்ளதாக குறிப்பிட்டார்.
இருப்பினும் அவர் நேரடியாக இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று கூறவில்லை. மாறாக, அதை முழுமையாகப் படித்து விட்டு ஆதரவு தெரிவிப்போம் என்றார்.
இதுகுறித்து பிரதமர் கூறுகையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கையில் நடந்த மனித உரி்மைகள் மீறல், போர்க்குற்றம் குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி்க்களும் தங்களது கவலைகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது கவலையில் நானும் பங்கேற்கிறேன், பகிர்ந்து கொள்கிறேன்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு நடவடிக்கைளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்.
அமெரிக்கா ஆதரவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. அதை அறிந்து கொண்ட பின்னர் அதை ஆதரித்து வாக்களிப்போம். இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க இந்தியாவும் முனைப்புடன் உள்ளது என்றார்.
பிரதமரின் இந்த அறிவிப்பை திமுக எம்.பிக்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர். அதேசமயம், அதிமுக எம்.பி. தம்பித்துரை எழுந்து, பிரமதரின் பதில் நேரடியாக இல்லை என்று கண்டித்துப் பேசினார். இதனால் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.
ஆனால் பிரதமரின் பதில் தங்களுக்குத் திருப்தி என்பது போல டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் புன்னகை பூத்த முகத்துடன் காணப்பட்டனர்.