Paraparappukkuriya filmed one of India’s Rock

ரா ஒன்னை இந்தியாவின் பரபரப்புக்குரிய படமாக்கிய ரஜினி!!

‘ஒரே நிமிடம்… ஜஸ்ட் ஒரே காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கப் போகிறார்’ – இந்த ஒரு செய்தி இத்தனை நாளும் தென்னிந்திய மக்களால் பெரிதாக பேசப்படாமல் இருந்த ஷாரூக்கானின் ரா ஒன் படத்தை, தலைப்புச் செய்திளில் இடம்பெறச் செய்துவிட்டது.

இதுவரை இந்தப் படத்தை ரஜினியின் ரோபோ காப்பி என்று பேசி வந்த வட இந்திய ரசிகர்களோ, ரஜினியே நடிக்கிறார் என்று தெரிய வந்ததும் மிக ஆவலுடன் அந்த செய்தி உண்மையாகும் தருணத்துக்காக காத்திருக்கின்றனர்.

அதுதான் ‘ரஜினி மாஜிக்’!

வட இந்திய செய்தித் தாள்கள் மற்றும் இணையதளங்கள் இப்படித்தான் தொடர்ந்து சில தினங்களாக எழுதிவருகின்றன.

‘ரா ஒன் படத்தை நம்பர் ஒன்னாக்கிவிட்டார் ரஜினி’ என குறிப்பிட்டுள்ளது இந்துஸ்தான் டைம்ஸ். ‘ரா ஒன்னை ரெட் ஒன்னாக்கிவிட்டார் சூப்பர் ஸ்டார்’ என புகழாரம் சூட்டியுள்ளார் பிரபல சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை.

வட இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் படத்தில் ரஜினி நடித்தால், ரோபோவின் காப்பி என்ற இமேஜ் நிச்சயமாக மாறிவிடும் என்கிறார் பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ்.

சரி… இது சாத்தியம்தானா…ரஜினி உண்மையில் நடிக்கப் போகிறாரா ரா ஒன்னில்?

இந்தக் கேள்விதான் பெரும்பாலான ரசிகர்கள் மனதில்.

ரா ஒன் படத்தின் தயாரிப்பாளர் ஈராஸ் இன்டர்நேஷனல். இவர்கள்தான் ரஜினியின் ராணா படத்தை சௌந்தர்யாவுடன் இணைந்து தயாரிக்கிறார்கள். ஷாரூக்கான் ஏற்கெனவே ரஜினியிடம் ‘இந்தக் காட்சியில் நடித்துத் தந்தால், படத்துக்கே அது ஒரு பெரிய கவுரவமாக இருக்கும்’ என கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு ரஜினி என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை.

ஈராஸ் நிறுவனத்தினரும் இதை தங்கள் விருப்பமாக தெரிவித்துள்ளனர். ஷாரூக்கானுக்காக இல்லாவிட்டாலும், ராணா தயாரிப்பாளர்கள் நலன் கருதியாவது ரஜினி இதைச் செய்யக்கூடும் என்பதுதான் திரையுலகில் பேச்சாக இருக்கிறது.

மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ள ரஜினி, பூரண ஒய்வுக்குப் பிறகு கேமராவுக்கு முன் நிற்கும்போது, அந்த அதி உயர்மின் வெளிச்சம் அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும் இந்த ஒரு நாள் ஷூட் பயன்படும் என்று திரையுலகினர் சிலர் தெரிவித்தனர்.

இன்னொரு பக்கம், விநியோகஸ்தர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர், ரஜினி நடிக்கிறாரா இல்லையா என்பதைப் பார்த்த பிறகு இந்தப் படத்தை வாங்க. ரஜினி நடித்தால் தென்னிந்திய உரிமை பெரும் விலைக்குப் போகும் என்பதால், படத்தை நேரடியாக ஈராஸின் துணை நிறுவனமான அய்ங்கரனே ரிலீஸ் செய்யத் தயாராக உள்ளது.

இவை எல்லாமே ரஜினி சொல்லப்போகும் ஒற்றை வார்த்தை பதிலைப் பொறுத்து இருக்கிறது!

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.